நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலத்தான் சினிமாவுக்கும்’ – நடிகர் விஷ்ணு விஷால்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அமலாபால் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கால்ஷீட் பிரச்னையால் அமலாபால் விலகியதாக செய்திகள் வெளியாகின. படத்திலிருந்து விலகியது குறித்து அறிக்கை வெளியிட்ட அமலாபால், “மும்பையில் எனது தனிப்பட்ட செலவில் நான் ஷாப்பிங் செய்தேன். ஆனால், தயாரிப்பு நிறுவனம் எப்போதும் பட்ஜெட் விவகாரத்தில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தனர். நான் படத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பினார். ஆடை படத்தின் டீசரைப் பார்த்த பிறகுதான் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அமலாபாலின் இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், ஒரு நடிகை துணிந்து பேசுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. பலமுறை நடிகர்கள் மீதுதான் தவறு என்பது போல சம்பவங்கள் நடந்துள்ளன. எத்தனை தயாரிப்பாளர்களால் நான் எப்படியெல்லாம் மோசமாக நடத்தப்பட்டேன் என்பதைச் சொல்ல வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால், எப்போதும் அவர்களை  ‘முதலாளி’ என்று மரியாதையுடன் தான் அழைத்திருக்கிறேன். நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலத்தான் சினிமாவுக்கும். சில அற்புதமான தயாரிப்பாளர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், உணர்வு, தொழில், உடல் ரீதியாகவும் நடக்கும் இந்த அநீதி குறித்துப் பேசும் நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.