நான் காமெடி நடிகனாக மாறியது விபத்து மாதிரி – ஷா ரா !

சிரிக்க வைக்கும் வேலை சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் சிந்திக்க வைக்கவும் சிரிக்க வைக்கவும் தெரிந்த மாபெரும் கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நானும் இருப்பது மகிழ்ச்சியே.எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. நிஜப் பெயர் சிவா சரவணன். இரண்டு வார்த்தை பெயர் சினிமாவுக்காக ஷா ரா என்று இரண்டெழுத்தாக மாறியது. படிச்சது விஸ்காம். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு ஒரு தனியார் ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே.வேலை கிடைத்தது. ரேடியோ மூலம் அங்கேயே சிரிக்க வைக்கும் வேலை துவங்கி விட்டது என்று சொல்லலாம்.  எனக்கு டைரக்‌ஷன் மீதுதான் ஆர்வம் இருந்தது. நான் காமெடி நடிகனாக மாறியது விபத்து மாதிரி என்று சொல்லலாம். டைரக்‌டராக வேண்டும் என்ற முடிவில் மும்பையில் உள்ள பிரபல விளம்பரப் பட இயக்குநரிடம் உதவியாளராக சில காலம் வேலை செய்தேன். அதற்கு முன்னாடியே நானும் என் நண்பரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்தோம். ஆனால் அந்தப் படத்தை சில காரணங்களால் தொடரமுடியவில்லை. பல லட்சங்கள் இழந்ததுதான் மிச்சம். அதன்பிறகு ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். இந்த சேனலை யூடியூப் பிரபலமடையாத சமயத்திலேயே ஆரம்பித்துவிட்டேன்.அந்த வகையில் முதன் முதலாக காமெடிக்கு என்று யூடியூப் சேனல் ஆரம்பித்தது நான் மட்டுமே. அதன் மூலமாக நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் நட்பு கிடைத்தது. அப்படித்தான் நடிக்க வந்தேன். நடிகனாகவேண்டும் என்பது என்னுடைய திட்டமே இல்லை. டைரக்‌ஷன்தான் என்னுடைய ஆல்டைம் சாய்ஸாக இருந்தது. அதுவும் காமெடி நடிகனாக வருவேன் என்பது கனவிலும் நினைத்திராத ஒரு விஷயம். நான் எதிர்பார்த்த டைரக்‌ஷன் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் எதிர்பாராத ஆக்ட்டிங் சான்ஸ் அமைந்ததால் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் சினிமாவில் டிராவல் பண்ண ஆரம்பித்தேன். ‘மாநகரம்’, ‘மீசைய முறுக்கு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நட்பே துணை’, ‘கோமாளி’, ‘சூப்பர் டூப்பர்’, ‘ஆக்‌ஷன்’, ‘ஓ மை கடவுளே’, ‘நான் சிரித்தால்’ என்று வரிசையாக படங்கள் பண்ண ஆரம்பித்தேன். தெரிந்தோ தெரியாமலோ என் மீது காமெடி நடிகர் என்ற முத்திரை வீழ்ந்துவிட்டது. அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். அதற்காக என்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டுதான் கேமரா முன்பு நிற்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா பிடிக்கும். வடிவேல் சாரின் காமெடி என்றால் வெகுவாக ரசித்துப் பார்ப்பேன். ஒருமுறை சுந்தர்.சி சார், ‘உன்னுடைய காமெடிக்கு நான் ரசிகன்’ என்று சொன்னார். இதை சினிமா கேரியரில் எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன். சிரிக்க வைக்கும் வேலை கஷ்டம் என்று எடுத்துக்கொண்டால் கஷ்டம். ஈஸி என்று எடுத்துக்கொண்டால் ஈஸி. எந்த வகையில் அது மாறுபடும் என்றால் கதையோடு கலந்த காமெடி என்றால் ஈஸியாக சிரிக்க வைத்துவிட முடியும். காமெடி போர்ஷன் கதைக்கு வெளியே இருக்கும்போதுதான் காமெடி பண்ணுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் என்னுடைய கேரக்டர் கதையோடு கலந்திருந்ததால் என் வேலை சுலபமாக முடிந்தது. சமீபத்தில் வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ படத்திலும் கதையோடு கலந்த காமெடி ரோல் கிடைத்ததால் என்னுடைய கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.சினிமாவில் காமெடி நடிகர்களையே சிரிக்க வைக்கும் காமெடி நடிகர் யார் என்றால் யோகிபாபு. அவர் இருக்கும் செட்டில் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. ‘கோமாளி’ படத்தில் அவருடைய காமெடி தனி ரகம் என்றால் படத்துக்கு வெளியே படக்குழுவை அவர் சிரிக்கவைத்த விதம் இன்னொரு ரகம். அவர் செட்டுக்கு வந்துவிட்டாலே படக்குழுவே உற்சாகம் அடைந்துவிடும். அப்படி அவர் எழுதிய கதைகளை அவ்வப்போது என்னிடம் சொல்லிக்காட்டுவார். அப்போது சிரித்துச் சிரித்து என்னுடைய வயிறு புண்ணாகியதுதான் மிச்சம். உண்மையில் மன அழுத்தத்திலிருந்து நம்மை வெளியே அழைத்து வருவது சிரிப்பு மட்டுமே. சிரிப்பை மறந்து வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தால் மனநிலையில் மாற்றங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது. விக்ரமன் சார் படங்கள் வெளிவந்த சமயத்தில் எமோஷனலுக்கு பஞ்சமிருந்தது. அதனாலேயே அப்போது எமோஷனல் படங்கள் அதிகமாக வெளிவந்தது. சினிமாவின் தேவையும், நகைச்சுவைப் படங்களும் மக்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். சினிமா இருப்பதால்தான் எல்லோரும் ரிலாக்ஸ்டாக வேலை செய்ய முடிகிறது. அப்படி மக்களைச் சிரிக்க வைக்கும் வேலையில் என் பங்கும் இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.