‘நான் பார்த்த உலகத்தரம் வாய்ந்த படம்’… டு லெட் பற்றி இயக்குனர் பாரதிராஜா!
இதுவரை தான் பார்த்த படங்களில் உலகத்தரம் வாய்ந்த படம் என்றால் அது “டு லெட்” தான்” என இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்துள்ளார். ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற 'டு லெட்' படம் கடந்த வியாழனன்று வெளியானது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 32 சர்வதேச விருதுகளை பெற்ற பெருமையுடன் இந்தப்படம் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகை சேர்ந்தவர்களும் இந்தப்படத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாகவது, “எனது கடந்த 50 ஆண்டு கால சினிமா வரலாற்றில் எழுபதுகளில் வந்த படங்களின் மீது எனக்கு கோபம் உண்டு. அதற்குப்பின் பாலசந்தர் நல்ல படங்கள் பண்ணினார். ஆனால் தற்போதைய சூழலில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வருகை ரொம்பவே அதிகமாகி இருக்கிறது சமீபத்தில் வெளியான படங்களில் வெற்றிமாறன் படங்கள், ராமின் பேரன்பு, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை இந்த படங்களை எல்லாம் பார்த்து நான் ரொம்பவே விமர்சித்துள்ளேன் பாராட்டியுள்ளேன். உண்மையிலேயே நான் வியந்து போய் விட்டேன ஆனால் அந்த அளவுகோல்களை எல்லாம் தாண்டி என்னை கவர்ந்த படம்தான் ‘டு லெட்'. செழியன் என்னுடைய நண்பன் தான். ஆனால் நான் பார்த்த செழியன் வேறு. இந்த டு லெட் படத்தில் பார்க்கின்ற செழியன் வேறு. செழியன் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல எழுத்தாளனும் கூட. சில படங்களை, அதன் கேரக்டர்களை ரசித்திருப்போம். ஆனால் அந்த கதாபாத்திரங்களுடனேயே வாழ்வது என்பது அரிதான விஷயம். இயக்குநர் செழியன் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார். அதில் நடித்த அனைவரையும் வாழ வைத்திருக்கிறார்.. படம் பார்த்த நம்மையும் அவர்களுடன் சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். இதில் ஹீரோவாக நடித்துள்ள சந்தோஷ் நம்பிராஜன் பெரிய எழுத்தாளர் விக்கிரமாதித்தனின் மகன்.. தந்தை மிகப் பெரிய எழுத்தாளர் என்றால் அவரது மகன் மிகப்பெரிய நடிகர் என்பதை நிரூபித்து விட்டார்.