நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் – விஷால் மீது நடிகர் உதயா பாய்ச்சல் !

நடிகர் விஷால் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் நடிகர் உதயா. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். உதயா நடிப்பில் கடந்த ஆண்டு உத்தரவு மகாராஜா என்ற படம் வெளியானது. இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் காரணம் என்று உதயா குற்றம்சாட்டினார். நேற்று விஷால் அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறி இருந்தார். அந்த படம் நன்றாக இல்லை, அதனால் ஓடவில்லை என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஷாலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உதயா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, விமர்சனங்களில் இருக்கும் நல்ல வி‌ஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும். சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. ‘விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்’ என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.