‘நெற்றிக்கண்’ ரீமேக் சர்ச்சை – விசுவிடம் பேசிய தனுஷ் மற்றும் மேனகா!

1981-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘நெற்றிக்கண்’. இயக்குநர் விசுவின் கதைக்கு, கே.பாலசந்தர் திரைக்கதை அமைந்திருந்தார். இந்தப் படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, ‘நெற்றிக்கண்’ படத்தின் கதாசிரியரான விசு, தனுஷுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதில், “அந்தப் படத்தின் கதை, திரைக்கதையாளன் நான். அதை உங்கள் மாமனாரிடம் கேளுங்கள் சொல்வார். அதில் நடித்தவர்கள் அனைவரிடமும் கேளுங்கள், சொல்வார்கள். நீங்கள் அந்தப் படத்தைத் தொடங்கினால், வழக்குப் போட்டுவிட்டால் என்ன விசு சாரே இப்படிப் பண்ணிட்டார் என நினைக்க வேண்டாம்” என்று பேசியிருந்தார் விசு. இந்த வீடியோ பதிவால்தான் ‘நெற்றிக்கண்’ ரீமேக் பணி நிறுத்தப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆனால், உண்மையில் ‘நெற்றிக்கண்’ படத்தின் பணிகளை தனுஷ் தொடங்கவே இல்லை. விசுவின் வீடியோ வெளியான 2 நாட்களில், அவரிடமே தொலைபேசி வாயிலாக தனுஷ் பேசியுள்ளார். இதனை விசு தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். அதில் விசு கூறியிருப்பதாவது, ”என்னுடைய பேட்டி வெளியான 2 நாட்களுக்குப் பின் தனுஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ‘அங்கிள்.. உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. எங்களது இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் எங்க அப்பா 1982-ல் இருந்து உங்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்தார். பல படங்களில் வேலை செய்திருக்கிறார்’ என்று பேசினார். பின்பு ‘அங்கிள்… உங்களுக்கு வந்த செய்தி உண்மையான செய்தி அல்ல. பத்திரிகை நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அது எந்தப் படம்’ என்று கேட்டார். அதற்கு ‘நெற்றிக்கண்’ என்று பதிலளித்தேன். அது எனக்கு ரொம்பப் பிடித்த படம்’ என்று சொன்னேன். அவ்வளவுதான். நான் அந்தப் படத்தின் உரிமையை யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதற்கட்டப் பணிகளையும் தொடங்கவில்லை. வந்தது தவறான தகவல்’ என்று சொன்னார். முன்னதாக கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் தொலைபேசி வாயிலாக கீர்த்தி சுரேஷை ‘நெற்றிக்கண்’ ரீமேக்கில் நடிக்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்” இவ்வாறு விசு தெரிவித்துள்ளார்.