படப்பிடிப்பில் விபத்து நடிகர் கோபிசந்த் படுகாயம் !

தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கிய காட்சிகளை ஜெய்ப்பூர் அருகே உள்ள மண்ட்வாவில் படமாக்கி வந்தனர். கோபிசந்த் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வில்லன்களுடன் மோதுவதுபோல் காட்சியை எடுத்தனர். இதை 3 கேமராக்கள் வைத்து படமாக்கி கொண்டு இருந்தார்கள். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற கோபிசந்த் திடீரென்று பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோபிசந்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.