படமாகிறது ஸ்வாதி கொலைவழக்கு விரைவில் படம் வெளியாகும் என தகவல் !

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே புதிய படம் தயாரானது. இந்த படத்தை ரமேஷ் செல்வன் இயக்கினார். ரவிதேவன் தயாரித்தார். சுவாதியாக ஐராவும் ராம்குமாராக மனோவும் நடித்தனர். கதாபாத்திரங்கள் சுவாதி, ராம்குமார் என்ற பெயரிலேயே இருந்தன. ஒரு வருடத்துக்கு முன்பே படப் பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வர தயாரானபோது எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். படக்குழுவினர் போலீசாரிடம் நேரில் ஆஜராகி சர்ச்சை காட்சிகளை நீக்கினர். கதாபாத்திரங்கள் பெயரையும் சுமதி, ராஜ்குமார் என்று மாற்றினர். படத்தின் தலைப்பும் ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றப்பட்டது. தணிக்கை குழுவும் சில காட்சிகளை நீக்கிவிட்டு ‘யூஏ’ சான்றிதழ் அளித்தது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு படத்தை திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்த திருமாவளவன், “சுவாதி கொலையின் பின்னணியில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. ராம்குமார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அந்த வழக்கு அடிப்படையில் தயாராகி உள்ள இந்த படம் நெடிய விவாதத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த படத்தை வெளியிடுவதற்கு எந்த சிக்கலும் இருக்காது” என்றார். இதைத் தொடர்ந்து படம் திரைக்கு வருகிறது.