பரத்துக்கு கைகொடுக்கும் திரில்லர் படங்கள் !

பரத் நடிப்பில் கடந்தாண்டு வெளியான காளிதாஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ எனும் திரில்லர் படத்தில் பரத் நடித்துள்ளார். லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கி உள்ளார். இவர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். பரத்துடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சுரேஷ் கதை எழுதி உள்ளார். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் எனவும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.