பள்ளி, வீடு தவிர மூன்றாவது ஒரு இடம் மாணவர்களுக்கு நிச்சயம் தேவை – சமுத்திரக்கனி

சாட்டை படத்தின் 2-ம் பாகம் ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபு திலக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சமுத்திரக்கனி பேசியதாவது, இந்த படத்தை பார்க்கும் ஆசிரியர்கள் இனி மாணவர்களை ‘கெட் அவுட்’ என்று சொல்லமாட்டார்கள். ‘வெளியே போ’ என்று சொல்வதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கிடையாது என்பது தான் உண்மை. அடுத்த சாட்டை முடிந்து இன்னொரு சாட்டை படமும் நிச்சயம் உருவாகும். பள்ளி, வீடு தவிர மூன்றாவது ஒரு இடம் மாணவர்களுக்கு நிச்சயம் தேவை. மாணவர்களுக்கு நிம்மதியையும், மன நிறைவையும், ஆறுதலையும் அளிக்கும் அந்த மூன்றாவது இடம் எது? அதுதான் புதிய படத்தின் கருவாக இருக்கும். சமூகத்துக்கு தேவையான நல்ல படங்களை தொடர்ந்து தருவோம். காசு சம்பாதிக்க படம் எடுக்கவில்லை. சமூகத்துக்கு எங்களால் முடிந்ததை திருப்பி கொடுக்கும் வேலையை செய்கிறோம். இவ்வாறு சமுத்திரக்கனி பேசினார்.