பாடகி, எஸ்.பி. ஷைலஜா தனது திரை பயணம் குறித்து !

நாங்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அப்பா பெயர், சாம்பமூர்த்தி; ஹரிகதை சொல்வதில் வல்லவர். அம்மா, சகுந்தலா, குடும்பத் தலைவி, நன்றாக பாடுவார். என்னுடன் பிறந்தவர்கள், ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள். 'ஸ்ரீபதி பண்டித்தாராஜுலா' என்ற பெயரில், எங்கள் வம்சத்தில் மகான் இருந்தார். அவர் பெயரை, எங்களின் இனிஷியலாக சேர்ப்பது வழக்கம்.அந்த வகையில் என் பெயர், எஸ்.பி.ஷைலஜா; அண்ணன் பெயர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பா ரொம்ப, 'ஜோவியல்!' ஆனால், படிப்பின் மீது அலாதி நம்பிக்கை கொண்டவர். புத்தகம் வாசிப்பது தான் அவரின் விருப்பம். அவர் போலவே, நானும், அண்ணனும் புத்தகங்களை விரும்பி படிப்போம்.அப்பா ரொம்ப மென்மையானவர்; எங்களைத் திட்டவே மாட்டார். அதிக சினிமா படங்களைப் பார்க்க மாட்டார். அப்பாவின் முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு, ஒரு பெண் குழந்தை. அதன் பிறகு, எங்கள் அம்மா சகுந்தலாவை, அப்பா திருமணம் செய்து கொண்டார். வீட்டின் மூத்தவர், அண்ணன் எஸ்.பி.பி., தான். அண்ணன் சினிமாவில் பாட முயற்சித்தது, அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. 'வீட்டின் மூத்த பிள்ளை என்பதால், நல்லா படிக்க வேண்டும்' என்பார். அது போலவே, அண்ணனும் இன்ஜினியரிங் படித்தார்.சினிமாவில் அண்ணன் நுழைந்து, முதல் பாட்டு பாடிய போது, அப்பாவுக்கு மகிழ்ச்சி இல்லை. 'படிப்பிலும் கவனமாக இருந்துக்கோ' என, அறிவுரை கூறினார். படிப்பு தான் முன்னேற்றம் தரும்; வீட்டில் உள்ள பெண்கள் யாரும், பாட்டு, நடனம் என, வெளியே போகக் கூடாது என்பார்.அம்மா தான், அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். நானும், தங்கையும் பள்ளியில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதையடுத்து, கச்சேரிகளில் பாடத் துவங்கினோம். கச்சேரிக்கு நான் போயிட்டு, வீட்டுக்கு வந்தால், அப்பா, 'உம்'மென்று இருப்பார். அதே நேரத்தில், பாட்டுடன் படிப்பிலும் நான் கெட்டி என்பதால், கண்டிக்க மாட்டார். பரதநாட்டியம் எனக்கு நன்றாக வரும். பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத், எனக்கு அண்ணன் உறவு முறை.அப்பாவை அவர் பார்த்து, 'சித்தப்பா, சங்கராபரணம் படம் பார்த்தீர்கள் அல்லவா அது போன்ற ஒரு படம் தான், சாகர சங்கமம்! அதில், ஒரு பாத்திரத்தில், ஷைலஜா நடிக்க அனுமதிக்க வேண்டும்' என, கேட்டார்; அப்பாவும் ஒப்புக் கொண்டார்; அதன் பிறகு தான் நடித்தேன். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில், பல பாடல்களும் பாடியுள்ளேன்!