பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்துள்ள புதிய படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் தன்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பேசியதாவது, இந்த விழாவில் பார்த்திபன் எனக்கு காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசாக தந்தார். காந்தியின் வாழ்க்கையைத்தான் நான் திரும்ப திரும்ப படிக்கிறேன். காந்தி ஒரு சூப்பர் ஸ்டார். அவர்தான் எனது கதாநாயகன். எனது ஹீரோவையும் வில்லனையும் மாற்றிக்கொள்ள முடியாது. வில்லனை கதாநாயகனாக ஏற்கவும் முடியாது. காந்தி ரெயிலில் ஒருமுறை பயணம் செய்தபோது தனது ஒத்த செருப்பை தவற விட்டார். எடுத்தவருக்கு உதவட்டும் என்று தனது இன்னொரு செருப்பையும் வீசினார். காந்தி வீசிய ஒரு செருப்பு என்னிடம் வந்து விட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். அதற்கான அருகதை எனக்கு இருக்கிறது. ஹேராம் படத்தில் காந்தியின் ஒரு செருப்பை எடுத்துக்கொண்டு வருவேன்.