பாலிவுட் படத்திலிருந்து காப்பி அடித்த பிகில் போஸ்டர்

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 23-ம் தேதி சிங்கப் பெண்ணே பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் தனது அணியுடன் நடுவில் நின்றிருந்தார் விஜய். இந்த போஸ்டர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘சக் தே இந்தியா’ படத்தின் போஸ்டர் காட்சியை காப்பி அடித்தது போல் இருப்பதாக இணையதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.