பிக் பாஸ் 3 புரொமோ வெளியானது

பிக் பாஸ் சீசன் 3யின் அதிகாரப்பூர்வ புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பானது. வெளியுலகத் தொடர்பு இல்லாமல், பிரபலங்கள் போட்டியாளர்களாக ஒரே வீட்டில் 100 நாட்கள் வசித்தது மக்களுக்கு புதுமையாக இருந்ததால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 2 ஒளிபரப்பானது. முதல் சீசன் போல் போட்டியாளர்கள் இயல்பாக இல்லை, கவனமாக விளையாடுகின்றனர், நடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தபோதும், அந்த நிகழ்ச்சிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது. மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. முந்தைய இரண்டு சீசன்களைப் போலவே இதனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். அடுத்தமாதம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.