பிடிபட்ட இந்தியா விமானியின் தந்தை மணிரத்தினத்தின் காற்றுவெளியிடை படத்தின் ஆலோசகராக இருந்தவர்!

பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துக்கு ரோல் மாடலாக, ஆலோசகராக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை காற்று வெளியிடை ஆடியோ வெளியீட்டு விழாவில் மணிரத்னமே பேசியுள்ளார். ராணுவத்திடம் சிக்கும் இந்திய விமானப் படை விமானியின் வாழ்க்கையைப் பற்றி பேசிய படம் அது. தமிழகத்தைச் சேர்ந்தவரான சிம்மக்குட்டி வர்த்தமான் பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தை வென்றவர். இது தவிர ஆதி விசிஷ்ட் சேவா விருது, விஷிஷ்ட் சேவா போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது மணிரத்னத்தில் படம் நிஜமானது போல, சிம்மக்குட்டி வர்த்தமானின் மகனான விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முற்பட்டது. அதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதில், அந்த விமானத்தில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ளார். அவரை பத்திரமாக மீட்பதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.