பிரபல காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு, உடலநலக்குறைவால் காலமானார்!

சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நடித்து வந்தவர், டைப்பிஸ்ட் கோபு. 'அதே கண்கள்', 'ருத்ரா' படங்களில் காமெடி ரோலில் நடித்திருப்பார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த  இவர், நேற்று மாலை 4.30 மணியளவில் இயற்கை எய்தினார். நடிகர் , எழுத்தாளர் சோ மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கோபு. இவரது நடிப்புத் திறமை காரணமாகப் பிரபலமானவர். முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான். நாகேஷுடன் நெருங்கிய நட்பு பாராட்டிவந்தார். வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். பொருளாதாரரீதியாக மிகவும் இந்நிலையில், சில சினிமா நட்சத்திரங்கள் இவருக்கு பண உதவிகள் செய்துவந்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, இவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுவந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்த கோபு, 700-க்கும் அதிகமான திரைப்படங்களிலும், ஏராளமான நாடகங்களிலும் நடித்திருக்கிறார். வயதான பின், திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறார். சென்னை, இராயப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த கோபு, திடீர்ரென உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு வயது முதிர்வின் காரணமாக, கோபு காலமானார். திரையுலகப் பிரபலங்கள் பலர் கோபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.