பிரபல ஹாலிவுட் நடிகர் காணாமல் போய் பிணமாக மீட்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (வயது 70). இவர் எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வின் த லைன்ஸ், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்ட சைல்ட், சிவில் ஆக்‌ஷன், மான் ஹாட்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சார்லஸ் லெவின் கடந்த 8–ந் தேதி திடீரென்று மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். சார்லஸ் லெவினின் மகன் தந்தையை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தார். போலீசாரும் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். ஆனாலும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சார்லஸ் லெவினின் கார் ஒரேகானில் உள்ள செல்மா என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காரை திறந்து பார்த்தபோது காருக்குள் அவரது நாய் இறந்து கிடந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதையும் கண்டு பிடித்தனர். உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அது சார்லஸ் லெவின் உடல் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடக்கிறது. சார்லஸ் லெவின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.