பிறந்த நாள் காணும் ஷோபனாவுக்கு வாழ்த்துக்களுடன்!

பிரமாதமான நடிகைப்பா என்று எல்லோரும் சொல்லுவோம்,  பாராட்டுவோம் அப்படிப்பட்ட நடிகையரில் முக்கியமானவர், ஷோபனா. 84-ம் ஆண்டு, மலையாளப் படம் ஒன்றில் அறிமுகமானார் ஷோபனா. அடுத்து இங்கே கமலுடன் ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ஜோடி சேர்ந்தார். சிவா படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டவர், ‘தளபதி’ படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தார். கேரளாதான் பூர்வீகம். லலிதா, பத்மினி, ராகினியின் உறவினர், நடிகை சுகுமாரியின் உறவினர், நடிகர் வினீத் கூட இவருக்குச் சொந்தமே ஆனாலும், கே.பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தின் பானு கேரக்டர்தான், இவரைத் தமிழகமே கொண்டாடக் காரணமாக இருந்தது. மடிசார் புடவையும் மூக்குக்கண்ணாடியுமாக வெளுத்து வாங்கியிருப்பார் ஷோபனா. ஷோபனா மிகச்சிறந்த பரத நாட்டியக் கலைஞர். பரதம் என்பது அவர்கள் குடும்பத்தின் வரம். பரதத்தில், புதுப்புது உத்திகளைக் கையாண்டார். குறிப்பாக, பரதத்திலேயே கதை சொல்லும் உத்தியால், எல்லோராலும் கவரப்பட்டார்.