புதுமுக இயக்குனர்களிடம் குறைந்தபட்சம் பெரிய ஹீரோக்கள் கதைகூட கேட்பதில்லை – சத்ரு இயக்குனர் !

பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ், இனிது இனிது என்ற படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தில் துணை இயக்குநரானேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் டூயட் மூவீஸ்தான் என் உலகம். அப்போ அறிமுகமான ராதாமோகன் சார் என்னை அவரது இணை இயக்குநராக சேர்த்துக்கொண்டார். அவருடன் சேர்ந்து பயணம், கவுரவம், உப்புக்கருவாடு ஆகிய படங்களில் பணியாற்றினேன். பிறகு நான் தனியாக வந்து படம் இயக்குவதற்காக, ‘சத்ரு’ படத்தின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன். இது பெரிய ஹீரோக்களுக்கான கதை என்பதால், பல முன்னணி ஹீரோக்களைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், நான் ஒரு புதுமுக இயக்குநர் என்பதால், என்னிடம் அவர்கள் கதை கேட்கக்கூட தயாராக இல்லை. பிறகு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிதான் ‘சத்ரு’ படத்தின் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஹீரோக்களை விட கதைதான் பெரிய ஹீரோ என்பதை உணர்ந்து, இளம் முன்னணி ஹீரோ கதிரை நடிக்க வைத்து இந்தக் கதையை இயக்கினேன். இப்போது சிலர், இதில் பெரிய ஹீரோ நடித்திருந்தால், படத்தின் தரமே வேறுமாதிரி இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ‘சத்ரு’ படம் மிகவும் திருப்தியான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நான் எதிர்பார்த்ததை விட கதிர் மிகச் சிறப்பாக நடித்தார்.