புருஸ்லீ பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஜாக்கி ஜான் !

மூத்த நடிகரும் அதிரடி நட்சத்திரமான ஜாக்கிசான் புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீயின் மிகப்பெரிய ரசிகராவார். ஜாக்கிசான் சமீபத்தில் புரூஸ் லீ திரைப்படமான என்டர் தி டிராகன் படப்பிடிப்பை நினைவு கூர்ந்துள்ளார். ஜாக்கிசான் 1970-களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார். புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’. உலகமெங்கும் பெரும் வெற்றியைக் குவித்த இந்தப் படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். படத்தில் புரூஸ் லீ ஒரு அடியாள் கும்பலைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியில் புரூஸ் லீயிடம் அடிவாங்கும் அடியாட்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்திருப்பார். அந்நிகழ்வு பற்றி கூறிய ஜாக்கி. அந்த வீடியோவில் ஜாக்கிசான் கூறியிருப்பதாவது, ''என்டர் த ட்ராகன்' படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் அடிவாங்க வேண்டும். எனக்குப் பின்னால் கேமரா இருந்தது. எனக்கு முன்னால் புரூஸ் லீ இருந்தார். நான் அவரை நோக்கி ஓடிச் சென்றேன். திடீரென எனது கண்கள் இருட்டிவிட்டன. அப்போது தான் அவர் ஒரு குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் புரூஸ் லீயைப் பார்த்தேன். அவரோ இயக்குநர் கட் சொல்லும்வரை நடித்துக் கொண்டே இருந்தார். பின்னர் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு என்னை நோக்கி ஓடி வந்து, என் தலையை தூக்கி ‘மன்னித்து விடு’ என்று கூறினார். எனக்கு வலி போய்விட்டது. நான் அப்போது இளைஞனாகவும் வலிமையாகவும் இருப்பேன். ஆனால் புரூஸ் லீ என்னைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வலிப்பது போல நடித்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்து கொண்டிருந்தேன்''. மேலும் தொடர்ந்த ஜாக்கி 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே புரூஸ் லீ இறந்துவிட்டார் என்றும் அது தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் கூறினார்.