புவி வெப்பமாவதை தடுக்க அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் – லியோனார்டோ டிகாப்ரியோ வலியுறுத்தல் !

பிரேசிலில் உள்ள ‘பூமியின் நுரையீரல்’ என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் வரலாறு காணாத காட்டுத்தீ பரவி வருகிறது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி, புவி வெப்பமாவதை தடுக்க அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என உலக அளவில் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த போதுமான நிதியை ஒதுக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை.  இந்நிலையில், அமேசான் காடுகளில் தீயை அணைத்து வனப்பகுதியை பாதுகாக்க ரூ.35 கோடியை நிதி திரட்டித் தருவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கூறி இருக்கிறார். ‘டைட்டானிக்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான டிகாப்ரியோ ‘எர்த் அலையன்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், அமேசான் காடுகளை பாதுகாக்க முதற்கட்டமாக ரூ.35 கோடி நிதியை திரட்டி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே, ஜி7 மாநாட்டில் அமேசான் காடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஜி-7 அமைப்பு சார்பில் ரூ.150 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.