பேனர், போஸ்டர் வைப்பதை முறைப்படுத்தப்படவேண்டும் சினிமாவுக்கும் இது பொருந்தும் – சின்ன கலைவாணர் விவேக் வலியுறுத்தல் !

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை ரேடியல் சாலையில்  சென்று கொண்டிருந்த போது,  ‘பேனர்’ சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனத்தை தெரிவித்தது. அதிமுக, திமுக மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என தங்கள் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விவேக்  தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது, துரதிர்ஷ்டவசமானது. சுபஸ்ரீ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலும் பேனர்கள் வைக்கும் பழக்கத்தை நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். கண்ட இடங்களில் பேனர், போஸ்டர்  வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என பதிவிட்டுள்ளார்.