பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல காலகட்டங்களில் முயற்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை படமாக்கும் ஆசை இருந்தது. தொடர்ந்து இயக்குனர் மணிரத்னமும் இந்த முயற்சியில் ஈடுபட்டார்.படத்துக்கு பெரிய தொகை செலவிட வேண்டி இருந்தது. நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்-நடிகைகளை தேர்வு செய்வதும் சவாலாக இருந்தது. இதனால் பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது மணிரத்னம் அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகி உள்ளனர். விக்ரம், ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், மோகன்பாபு ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். விக்ரம் ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று தெரிகிறது. கீர்த்தி சுரேசிடம் சமீபத்தில் மணிரத்னம் கதை சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.