மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா போட்டி விதிகளின்படி வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா தனியார் இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ‘பிக்பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இன்னொரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. மூன்றாவது சீசனில் அழைக்கும்போது இந்த முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். நாம் தமிழ் ரசிகர்களுக்காக தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் சுத்துவார். ஒரு அக்கா மாதிரி இருந்து அவருக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை.எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் லாஸ்லியா நன்றாக தான் இருந்தார். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவரது மனம் மாறிவிட்டது.