மற்றுமொரு சுயசரிதை கதையில் ஐஸ்வர்யா ராய் !

நடிகை சாவித்ரி வாழ்க்கை கதை நடிகையர் திலகம் பெயரிலும், சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை தி டர்ட்டி பிக்சர் (இந்தி) பெயரிலும் உருவானது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தனர். இதிலிருந்து மாறுபட்டு விலைமாதாக இருந்து நாடக நடிகையாக, பின்னர் திரைப்பட நடிகை ஆன பினோதினி தாசி என்பவரின் சுயசரிதை திரைப்படமாக உள்ளது. இவரது காலகட்டம் 1862 முதல் 1941 வரையானதாகும். கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட இவர் விலைமாதாக இருந்து தனது 12வது வயதில் நாடக நடிகையானார். பின்னர் ‘அமர் கதா’என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். பினோதினி தாசி பின்னர் நோட்டி பினோதினி என்றும் அழைக்கப்பட்டார். பினோதினியின் சுயசரிதையை திரைப்படமாக்க இயக்குனர் பிரதீப் சர்கார் திட்டமிட்டிருக்கிறார். பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது. தற்போது ஐஸ்வர்யாராயிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இக்கதையினை கேட்டு ஐஸ்வர்யாராய்க்கு பிடித்திருந்தாலும் படத்தின் இறுதிவடிவ திரைக்கதையை பார்த்த பிறகே நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என தெரிவித்திருக்கிறார். ஐஸ்வர்யாராய் ஏற்கனவே பாகிஸ்தான் கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சொரப்ஜித் வாழ்க்கை திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தில் சொரப்ஜித்தாக ரன்தீப் ஹூடா நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.