மலேசியா டூ தமிழ்நாடு – மனங்களை வென்ற முகேன் ராவ் வெற்றியாளரின் கதை

மலேசியாவில் காவல்துறைப் பணியில் இருந்திருக்க வேண்டிய ஒருவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராகி இருக்கிறார். தங்கள் மகன் காவல்துறை பணியில் சேர வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. முகேனுக்கோ இசையில்தான் அதிக நாட்டம். சிறு வயது முதலே இந்த ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் முகேன். தந்தை பிரகாஷ் ராவ் நல்ல பாடகர், மேடை நாடக நடிகர் என்பதால் மகன் முகேனுக்கும் கலைத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 13 வயதிலேயே சொந்தமாக பாடல்களும் எழுத ஆரம்பித்தாராம் முகேன். மலேசியாவைப் பொறுத்தவரை உள்ளூர் கலைஞர்கள் பிரபலமடைவதற்கு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அல்லது மேடை நிகழ்ச்சிகள் போன்ற தளங்களில் பயணித்திருக்க வேண்டியது அவசியம். இவற்றின் மூலமாகவே கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் இவற்றில் அதிகம் தடம் பதிக்காமல் சுயமாக தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டுள்ளார் முகேன். தனி இசைத் தொகுப்புகள், யூடியூப் தளத்தில் பல்வேறு சுவாரசியமான காணொளிப் பதிவுகள், சில தமிழ், மலாய் மொழித் திரைப்படங்களில் பங்களிப்பு என ஆயிரக்கணக்கான மலேசிய இளைஞர்களை தன்வசம் ஈர்த்துள்ளார் முகேன். அவரது பாடல்களை முணுமுணுக்காத மலேசியத் தமிழ் இளைஞர்கள் இல்லை எனுமளவுக்கு ரசிகர் கூட்டம் விரிவடைந்துள்ளது. இவரது பாப் பாடல்கள் அனைத்துமே துள்ளல் ரகம் தான். வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பாமல், வாய்ப்புகள் தேடி வரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் முகேன் இன்றைய இளைய சமுதாயத்துக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் என்கிறார்கள் மலேசிய கலைத்துறை பிரமுகர்கள். சிறந்த பாடகர், நடிகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் மீறி நல்ல குணமும் மனிதநேயமும் கொண்ட பாசக்கார சகோதரர். மொத்தத்தில், உணர்வுப்பூர்வமான, சவால்கள் நிறைந்த பால்ய பருவத்தை போராடிக் கடந்த முகேன், இப்போது சாதனைகளை நோக்கி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.