மான்ஸ்டர்ஸ் வெற்றியைத் தொடர்ந்து ராதாமோகன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா !

மான்ஸ்டர்ஸ் படவெற்றிக்கு பிறகு இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இப்படங்களை அடுத்து, குடும்பங்கள் ரசிக்கும் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக  இந்தப் படத்தை இயக்க உள்ளார். சமீபகாலமாக  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதா மோகன், எஸ்.ஜே.சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா இணையும் இந்த பிரம்மாண்ட கூட்டணி 2020  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.