மீண்டும் இணையும் சூரியா ஹரி வெற்றி கூட்டணி

ஹரி தயார் செய்து வைத்திருக்கும் புதிய கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெரிந்து கொண்ட நடிகர் சூர்யா உடனடியாக ஹரியை அழைத்து அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு தானே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது நடித்து வரும் சூரரைப் போற்று படத்தை அடுத்து, இயக்குநர் ஹரியின் படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. இதற்காக அட்வான்ஸ் தொகையையும் ஹரிக்கு கொடுத்துவிட்டார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். இரண்டாம் பாகமாக, இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சாமி ஸ்கொயர் திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இயக்குநர் ஹரி அடுத்ததாக தான் இயக்கும் படம் வெற்றிப்படமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அடுத்த வெற்றிப் படத்திற்காக முழுவீச்சில் கதை விவாதத்தில் ஹரி ஈடுபட்டுள்ளார்.