மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்

அஜித்குமார் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. இதில் பிரச்சினையில் சிக்கும் 3 இளம்பெண்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் வருகிறார். ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை எடுத்து பிரபலமான வினோத் இயக்குகிறார். அதன்பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்தன. கடந்த ஜனவரியில் விஸ்வாசம் படம் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. அஜித்துக்கு புதிய கதையை சிவா தற்போது தயார் செய்து இருப்பதாகவும் திரைக்கதையில் மேலும் மெருகூட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.