மெர்சல் சம்பளபாக்கியை வாங்காமல் விடமாட்டேன் – மேஜிக் நிபுணர் ஆவேசம் !

விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். மெர்சல் படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய், ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் நிபுணராக வருவார். ஒரு காட்சியில் மேஜிக் மூலமாக சண்டையிடுவது போல படமாக்கி இருப்பார்கள். இந்த சண்டைக்காட்சி உள்பட மேஜிக் தொடர்பான காட்சிகளில் பணிபுரிந்தவர் சர்வதேச மேஜிக் நிபுணர். இவர் ஏற்கனவே ‘மெர்சல்’ படத்தில் இன்னும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், சம்பளத்தை வாங்காமல் போக மாட்டேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ‘மெர்சல் படத்திற்காக விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த எனக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்னும் ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருக்கிறது. பலமுறை அந்த பணத்தை கேட்டும் தயாரிப்பு தரப்பில் இருந்து பதில் வராததால் கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் இருந்து சென்னைக்கு வந்து வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய தயாராகியிருக்கிறேன். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறுவதை தான் நம்பவில்லை. சமீபத்தில் கூட ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். எனவே தான் கஷ்டப்பட்டு பணிபுரிந்ததற்கான சம்பளத்தை வாங்காமல் விடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.