யோகி பாபுவுக்கு செல்லும் வடிவேலு பட வாய்ப்புகள்!

நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் வடிவேலு. யதார்த்தமான உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகனை கவர்ந்தார். திரைப்படங்களில் இவர் தனி ஆளாக என்ட்ரி கொடுக்கும் போதே அரங்கம் அதிரும். இப்போதும் வடிவேல் நாயகனாக நடிக்கும் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு தற்போது இருக்காது என்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்கின்றனர். ஆனால் வடிவேலு சம்மதிக்காததால், இதனால் வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். தர்மபிரபு படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.