ராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித் – வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்!

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொழுது மன்னர் ராஜ ராஜ சோழனை அவன் இவன் என ஏக வசனத்தில் பேசினார் பா.ரஞ்சித். ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். பல இந்து அமைப்புக்கள் ராஜ ராஜ சோழன் குறித்த பா ரஞ்சித்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.  இதற்கிடையில் திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.  கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.