ரிலீஸுக்கு முன்னால் தடை என்று மிரட்டினால் என்ன அர்த்தம்?

நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள, 'கொலையுதிர் காலம்' படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்து இருந்தனர். இதனிடையே, 'கொலையுதிர் காலம்' என்ற பெயர் 'தன்னுடைய நாவலின் தலைப்பு' என்று சொல்லி, எழுத்தாளர் சுஜாதாவின் சார்பாக படத்தின் ரிலீஸுக்கு தடைகேட்டு வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறது. இதுபற்றி தயாரிப்பாளர் மதியழகனிடம் கேட்டபொழுது, 'கொலையுதிர் காலம்' படத்தை வாங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி ரிலீஸ் வேலையைப் பார்ப்போம் என்று சந்தோஷமாக இருந்தேன். சென்னையில் இருந்து 'படத்துக்குத் தடை' என பகீர் தகவல் வந்திருக்கிறது. சுஜாதா எழுதிய நாவலின் பெயர், 'கொலையுதிர் காலம்' என்று சொல்லி தடை வாங்கியுள்ளனர். இது, அவர்களுடைய டைட்டில் என்றால், கவுன்சிலில் அந்தப் பெயரை ரிஜிஸ்டர் செய்துவைக்காமல், இப்போது திடீரென்று ரிலீஸுக்கு முன்னால் தடை என்று மிரட்டினால் என்ன அர்த்தம்? ஏற்கெனவே யுவன் ஷங்கர் ராஜா, முறைப்படி 'கொலையுதிர் காலம்' தலைப்பைப் பதிவுசெய்து வைத்திருந்தார். அதன்பின், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு இந்த இரண்டு அமைப்பின் மூலமாக முறைப்படி என் பெயருக்கு மாற்றிக்கொடுத்தார். கொலையுதிர் காலம்' ஆடியோ விழா நடந்தது. அப்போது யாரும் வாய்திறக்கவில்லை. தயாரிப்பாளர் ரிலீஸ் பரபரப்பில் தவிக்கும்போது பணம் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று திட்டமிட்டுச் செய்கின்றனர். எனக்கு மட்டுமல்ல நிறையத் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற அநியாயச் செயலை அனுபவித்துவருகின்றனர். கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தாவது, உண்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவேன்'' என்று கொந்தளித்தார் மதியழகன்.