லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் !

ஜூன் 21-ந்தேதி வெளியாக இருந்த விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர், பாகுபலி தயாரிப்பாளருக்கு தர வேண்டிய தொகையைச் செலுத்தாததால் வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 28-ந்தேதி என அறிவிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் தியேட்டர் கிடைக்காமல் அல்லது குறைவாகக் கிடைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் யோகி பாபுவின் தர்மபிரபு, வெற்றியின் ஜீவி, லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு தனது நிலையை விளக்கி கோரிக்கை விடுத்துள்ளார். பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’ என கூறியுள்ளார்.