வசூலைக் குவித்து வரும் ‘டிஜிட்டல்’ வசந்த மாளிகை !

தற்போது வரும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் கூட வந்து, போன தடம் தெரியாமல், மக்கள் மறந்து விடும் நிலையில், 1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த வசந்த மாளிகை அதற்கு விதிவிலக்கு. நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அப்போது  200க்கும் அதிகமான நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. வசந்தமாளிகை திரைப்படத்தை எப்போது பார்த்தாலும் சிலிர்க்க வைப்பதாகவும், சிவாஜி நடிப்பை இப்போது டிஜிட்டல் முறையில் பார்த்து ரசிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் சிவாஜியின் ரசிகர்கள். படம் எதிர்பார்த்தைவிட அதிக வரவேற்பை பெற்றிருப்பதாகவும்,  முதியவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் கூட இந்த படத்தை விரும்பி பார்க்க திரையரங்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த படத்தை டிஜிட்டல் முறையில்  மறு வெளியீடு செய்த தயாரிப்பாளர் நாகராஜ். 47 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை கட்டிப்போட்ட திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை. தற்போது டிஜிட்டல் முறையில் வெளியாகியுள்ள அந்த திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.