வரும் மே மாதம் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் -விஷால் அதிரடி!!!
சென்னை: தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள்இடம் உரையாற்றிய விஷால், “வரும் மே 30-ஆம் தேதி முதல் திருட்டு வி.சி.டி.க்கு எதிராக போராட்டத்தை நடத்தவுள்ளோம். எந்த ஒரு திரையரங்கிலும் படங்கள் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம். திருட்டு வி.சி.டி. யால் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் மீண்டும் கோரிக்கை அளிக்கவுள்ளோம். திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத இணையதளம் மூலம் படம் பதிவிறக்கம் செய்வதையும் தடுக்க வேண்டும்.
தமிழ் திரையுலகிற்கு மே 30-ம் தேதிக்குள் நல்லது நடக்கும் என நம்புகிறோம். சிறு தயாரிப்பாளர்கள் மானியத்திற்காக 10 வருடங்களாக காத்திருக்கிறார்கள். 7 வருடங்களாக தமிழக அரசு சார்பில் எந்ததொரு விருதும் வழங்கப்படவில்லை. அனைவருமே ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகையால் மே 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம். எங்களால் படம் எடுப்பதற்கான ஒரு நிம்மதியான சூழல் வரும்வரை வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,” என்றார்.