வறுமை, நோய் பாக்யராஜ் சிஷ்யன் உதவி கேட்டு உருக்கம்!

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், 'டேய்… சண்முகமணி' என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர். அப்படம் மட்டுமின்றி ராசுக்குட்டி உள்பட பாக்யராஜின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அருணாச்சலம் படத்தில் ரஜினியுடனும் சேர்ந்து நடித்துள்ளார். அப்போது ரஜினியே இவரது நடிப்பை பாராட்டியுள்ளார். அன்று அனைவரையும் சிரிக்க வைத்த நந்தகோபால், இன்று ஒரு வேளை சாப்பாட்டிற்காக தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்தகோபால், சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அருகில் உள்ள வீட்டில், கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். கால்கள் இரண்டும் நீர்கோர்த்து, வீங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாது. எனவே தனது வேலைகளைக்கூட செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறார் நந்தகோபால். இப்போது அவருடைய ஒரே கோரிக்கை, யாராவது தனக்கு நிதியுதவி செய்து, கேர்டேக்கர் ஒருவரை நியமித்தால், தான் உயிரோடு இருக்கும் வரை உதவியாக இருக்கும் என்பதே. இப்போதும் அதே வெள்ளந்தி சிரிப்புடன் கேட்கிறார் 'நமசிவாயம்' நந்தகோபால்.