வாழ்க விவசாயி படம் என்னை வாழவைக்கும் என நம்புகிறேன் – அப்புக்குட்டி நம்பிக்கை !

தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா இணைந்து நடித்துள்ள படம் 'வாழ்க விவசாயி'. அறிமுக இயக்குனர் பொன்னிமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து அப்புக்குட்டி நம்மிடையே, 'எனக்கு 'அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித்தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று  முடிவு செய்து கொண்டேன். இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக 'வாழ்க விவசாயி 'கதை அமைந்திருக்கிறது. அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை. இயக்குநர் பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே. அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு படத்தின் நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. அவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது 'பேராண்மை'யிலும் நன்றாக நடித்திருந்தார். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.