விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி – பட தயாரிப்பாளர் மீது வழக்கு !

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷராஹாசன் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகிய படம் ‘விவேகம்’. இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்றே கூறப்பட்டது. இந்நிலையில் விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். பட நிறுவனம், தியாகராஜனிடம் நான்கு கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறி, அந்த நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.