வெவ்வேறு படப்பிடிப்புகளில் நடந்த விபத்தில் 3 கதாநாயகர்கள் காயம்!

தெலுங்கு படப்பிடிப்புகளில் நடந்த விபத்துக்களில் நாகசவுரியா, சந்தீப் கிஷன், சர்வானந்த் ஆகிய 3 கதாநாயகர்கள் காயம் அடைந்தனர். நாகசவுரியா தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தியா’ படத்தில் நடித்தவர். தற்போது ‘அஸ்வத்தம்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்குவேலியில் நடந்தது. அங்கு சண்டை காட்சியில் நாகசவுரியா டூப் போடாமல் நடித்தார். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் அவரது இடது கால் மூட்டில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பை நிறுத்தி நாகசவுரியாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு மாதம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழில் யாருடா மகேஷ், நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தற்போது ‘நின்னு வேடனி நீடனு நினே’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு குன்னூரில் நடந்தது. சண்டை காட்சியில் கண்ணாடி துண்டுகள் அவரது முகத்தில் குத்தி ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோல் எங்கேயும் எப்போது, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள சர்வானந்த் தாய்லாந்தில் நடந்த ‘96’ தெலுங்கு படப்பிடிப்பில் உயரத்தில் இருந்து குதித்தபோது காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.