ஸ்ரீ தேவியின் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு: இறுதிச்சடங்கு ரசிகர்கள், திரையுலகினர் திரண்டுள்ளனர்….

நடிகை ஸ்ரீ தேவியின் இறுதிச்சடங்கு இன்று நண்பகலுக்கு மேல் மும்பையில் நடைபெறுகிறது. இதில் தமிழ் திரையுலகினர் கலந்துகொள்கின்றனர். அவரின் உடல் துபாயில் இருந்து மும்பை கொண்டு வந்ததும் ஜூஹு என்ற இடத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக  அவரது ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக மும்பை அந்தேரி மேற்கு ஜே.பி. சாலையில் உள்ள வாக்கியா பங்களா வளாகத்தில் அவரது உடல் வைக்கப்படுகிறது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவில் இருந்தே அவரது ரசிகர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் மரணத்திற்கு முன்பு அவரது உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கணவருடன் சேர்ந்து அணைத்து கொண்டு நடனம் ஆடி விட்டு மும்பைக்கு அனைவரும் சென்று விட்டனர். ஆனால் அவர் மட்டும் ஹோட்டலில் தனியாக தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு ஆனந்த அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருடைய கணவர் போனி கபூர் சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்றுள்ளார். இரவு உணவுக்கு செல்ல தயாராகுமாறு கணவர் கேட்டுக்கொண்டதால் முகம் கழுவ சென்ற அவர் 15 நிமிடங்கள் கடந்தும் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து கணவர் அவருடைய நண்பர்களும் கதவை உடைத்து பார்க்கும் போது அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவர்கள் திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். அவரது பிரேத பரிசோதனைக்கான அறிக்கை கிடைத்த பின்னரே அவரது இறப்புக்கான காரணம் குறித்த முழு தகவல்கள் தெரியவரும்.