ஸ்ருதிக்கு நேர்ந்த அவலம் – தெலுங்கில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்!

விஜய்யை வைத்து அட்லி முதன்முதலாக இயக்கிய படம் ‘தெறி’. 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்த படம் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஏகப்பட்ட போட்டி நிலவியது. விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ஹீரோயினாக சுருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் சுருதி நடிக்கலாம் என தெரிகிறது. இன்னொரு ஹீரோயின் யார் எனத் தெரியவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.