ஹீரோ இல்லாத படத்தில் 4 ஹீரோயின்கள்!
ஒரு ஹீரோவுக்கு 4 ஹீரோயின்கள் அதற்கு மேலும் ஜோடியாக நடித்த படங்கள் வந்த நிலையில் ஹீரோவே இல்லாமல் 4 நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கும் படம் உருவாகிறது. கன்னித்தீவு பெயரில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் சுந்தர் பாலு இயக்குகிறார். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இது வரலாற்றுபடமோ, மாயாஜால படமோ கிடையாது. நவீன காலத்து கதைதான். பள்ளி படிப்பு முதல் ஒன்றாகவே படித்த 4 தோழிகள் பின்னர் சமூக பணிகளில் ஈடுபடுகின்றனர், பொதுச் சேவை செய்யும்போது தங்களையே அறியாமல் ஒரு பிரச்னையில் சிக்குகின்றனர். அவர்களை கொல்வதற்கு ஒரு ரவுடி கூட்டம் புறப்படுகிறது. அவர்களிடமிருந்து 4 பேரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை படம் சொல்கிறது. குத்து சண்டை வீராங்கனையாக வரலட்சுமி நடிக்க அவருடன் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா நடிக்கின்றனர். 4 பேருமே ஆக்ஷன் காட்சியில் குறிப்பாக கண்ணாடியை உடைத்துக்கொண்டு பாயும் ரிஸ்க்கான காட்சிகளில் 4 பேரும் துணிச்சலாக நடித்தனர். இதில் ஹீரோ கிடையாது, வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்கிறார். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது படத்தில் சுமார் 45 நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. கிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பு. சிட்டிபாபு ஒளிப்பதிவு. ஆரோல் கரோலி இசை. இவ்வாறு இயக்குனர் சுந்தர் பாலு கூறினார்.