சர்வதேச சைமா தென்னிந்திய விருது வழங்கும் விழா – திரிஷா, தனுஷுக்கு சிறந்த நடிகர், நடிகை விருது !

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது. இதில் 4 மொழி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். சிறந்த நடிகருக்கான விருது ‘வடசென்னை’ படத்தில் நடித்த தனுசுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘96’ படத்தில் நடித்த திரிஷாவுக்கும் வழங்கப்பட்டன. ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெற்றனர். சிறந்த படத்துக்கான விருதை ‘பரியேறும் பெருமாள்’ பெற்றது. சிறந்த இயக்குனர் விருது பாண்டிராஜுக்கும், சிறந்த அறிமுக இயக்குனர் விருது நெல்சனுக்கும், சிறந்த அறிமுக நடிகர் விருது தினேசுக்கும், அறிமுக நடிகை விருது ரெய்சாவுக்கும் கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ஆர்.டி.ராஜசேகர் பெற்றார். விருதுகளை நடிகர் மோகன்லால் வழங்கினார். விழாவில் நடிகர்கள் பிருதிவிராஜ், டோவினா தாமஸ், சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ராய்லட்சுமி, ஸ்ரேயா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, நிகிலா விமல், சுவாதிஷ்தா, ஜனனி அய்யர், டைரக்டர் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி, ராஜ்குமார் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.