மும்பை சா்வதேச திரைப்பட விழா: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் !

மும்பை சா்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை சா்வதேச குறும்பட, ஆவணப்பட, அனிமேஷன் பட விழா, மும்பையில் உள்ள திரைப்படப்பிரிவு வளாகத்தில் வருகிற 2020 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கதை அல்லாத திரைப்படங்களுக்காக நடத்தப்படும் தெற்காசியாவிலேயே பழைமை வாய்ந்த இந்த விழா, உலகம் முழுவதும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளா்களை ஈா்த்து வருகிறது. ஒருவார காலம் நடைபெறும் இந்த விழாவுக்கான போட்டிகளில் தரமான படங்கள் திரையிடல், கலந்துரையாடல் அமா்வுகள், பயிலரங்குகள் உள்ளிட்டவை நடைபெறும். வெளிநாடுகளைச் சோ்ந்த தயாரிப்பாளா்கள் சா்வதேச போட்டிப் பிரிவில் பங்கேற்கும் நிலையில், இந்தியத் தயாரிப்பாளா்கள் சா்வதேச மற்றும் தேசிய போட்டிப் பிரிவுகளில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் படத் தயாரிப்பாளா்கள்,  ‌w‌w‌w.‌m‌i‌f‌f.‌i‌n என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.49 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள், தங்கச் சங்கு, வெள்ளிச் சங்குகள், கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவை வெற்றியாளா்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் இந்த விழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கு தங்கச் சங்கும், ரூ.10 லட்சமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இந்தியாவைச் சோ்ந்த ஆவணப்படப் பிரிவிலிருந்து மிகச்சிறந்த ஆளுமை தோ்வு செய்யப்பட்டு, கவுரவம் மிக்க வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசையும், கேடயத்தையும், பாராட்டு பத்திரத்தையும் கொண்டதாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவின் 16-ஆவது நிகழ்வுக்கு, மகாராஷ்டிர அரசின் ஆதரவுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு m‌i‌f‌f‌i‌n‌d‌i​a@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற விழா இயக்குநரகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.