16 பாலியல் புரோக்கர்களுக்கு தண்டனை அறிவிப்பு

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உட்பட 16 பாலியல் புரோக்கர்களுக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தது. மதபோதகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதிலான இரு பள்ளி மாணவிகள் கடந்த 2014 ஜூன் மாதம் காணாமல் போயினர். இது தொடர்பாக  அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர். இந்நிலையில் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் தொழில் கும்பலின் பிடியிலிருந்து தப்பி அந்த சிறுமிகள் வீடு திரும்பினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சிறுமிகளிடம் திட்டக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் இருவரையும் அதே பகுதியில் வசிக்கும் மதபோதகர் அருள்தாஸ், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதேபோல் திட்டக்குடியை சேர்ந்த தனலட்சுமி, விருத்தாசலம் கலா, வடலூர் சதீஷ்குமார், நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் கூட்ரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் இந்த மாணவிகளை விடுதியில் தங்க வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் இவ்வழக்கில் 16 பேரை குற்றவாளிகள் என கடந்த 4ம் தேதி அறிவித்தார். மேலும், தனித்தனி பிரிவுகளிலும்  தண்டனை அளிக்கப்பட்டு அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். தீர்ப்பை கேட்டதும் தண்டனை பெற்றவர்களும், வெளியே இருந்த அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர். இந்த தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா கூறுகையில், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க நீதிபதி லிங்கேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.