300 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகும் ரெமோ,றெக்க​ மற்றும் தேவி ரிலீஸ் தள்ளிப்போக​ வாய்ப்பு!

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த வருடம் ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ, விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க, பிரபுதேவா, தமன்னா நடித்த  தேவி ஆகிய மூன்று படங்கள் ரிலீசாக​ உள்ளன. இந்த மூன்று படங்களில் ரெமோ, றெக்க இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்திற்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.காரணம், இந்தப் படத்தில் பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதுதான். அதோடு, அனிருத்தின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது, பிரம்மாண்டமான புரமோஷன் என 'ரெமோ' பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 1050 தியேட்டர்களில் 'ரெமோ'வுக்காக மட்டுமே 325க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். றெக்க படம்300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

'தேவி' டப்பிங் படம் என்பதால் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லையாம்.இதுவரை சுமார் 125 தியேட்டர்கள் மட்டுமே புக் பண்ணி உள்ளனர்.மேலும் 25 தியேட்டர்கள் கிடைத்தால்தான் திட்டமிட்ட தேதியில் தேவி படம் வெளியாகும் என கூறியுள்ளனர்.150 தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால் ஒருவாரம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்துள்ளது.