88 வயதிலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சௌகார் – ஆச்சர்யப்படும் கார்த்தி !

நடிகர் கார்த்தி ‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்டார். இப்படத்தின் பலமே நடிகர்கள் தான். சத்யராஜ் சார் பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இளவரசு இருக்கிறார். ‘சௌகார்’ ஜானகி அம்மா நடித்திருக்கிறார். அவருக்கு 88 வயதாகிறது. இதுவரை கிட்டதட்ட 400 படங்களில் நடித்துவிட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கும். அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும். இத்தனை வயசானாலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். ஒருசில தோல்விகளிலேயே நாம் துவண்டு விடுகிறோம். ஆனால், அவர் இத்தனை ஆண்டு அனுபவத்தில் எத்தனை தோல்விகளைச் சந்தித்திருப்பார். இருப்பினும், துவண்டுவிடமால் கொள்ளு பேரப்பிள்ளைகள் வரை அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இன்றும் தானே சமைத்து சாப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், படக்குழுவிற்கு இரண்டு நாட்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். பணி என்று வந்துவிட்டால் நேர்மையாக இருக்கிறார். அவர் காலத்து கலாச்சாரம் நம்மை வியப்படைச் செய்கிறது. அண்ணியை படப்பிடிப்பில் பார்க்கும்போது வீட்டில் எப்படியோ.. அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், அவர் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்குதான் பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த அனுபவம், பெரிய இயக்குநரிடம் நடிக்கிறோம் என்றில்லாமல் இயல்பாக இருந்தது. அனைவரும் இணைந்து தான் இப்படத்தை எடுக்கிறோம். அனைவரும் ஒரே குடும்பமாக செயலாற்றி இப்படத்தை முடித்தோம்.