’90 எம்.எல்’ ட்ரெய்லர் சர்ச்சை: ஓவியா விளக்கம்!

சமீபத்தில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படத்தின் ட்ரெய்லர் பலத்த சர்ச்சைக்கு உள்ளான நிலையில், “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்” என ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஓவியா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படத்தில் ப்யூட்டி பார்லரில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக ஓவியா வருகிறார். சிம்பு இசை, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என படக்குழு தொழில்நுட்ப ரீதியில் பலமாக உள்ளது. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் பெற்ற ‘90 எம்.எல்’ (90 ML) படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாக தமிழ் சினிமா ஆர்வலர்கள் விமர்சித்ததால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குப் பதில் அளிக்கும் வகையில் ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், ''பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார். ஓவியாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இணையதளவாசிகள்  தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.