2.O ஹிந்தி உரிமம் 80 கோடிக்கு விற்பனை
ரஜினி, எமி ஜாக்சன் அக்ஷ்ய்குமார் நடித்து வரும் 2.O படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. சுமார் ரூ.400 கோடி செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தின் வியாபாரத்தை லைக்கா நிறுவனம் துவக்கி உள்ளது.
முதல் கட்டமாக இதன் ஹிந்தி உரிமத்தையும், ஒளிபரப்பு உரிமத்தையும் சேர்த்து ரூ.110 கோடி ரூபாய்க்கு ஜீ டி.வி குழுமம் வாங்கி உள்ளது. இதில் இந்தி தியேட்டரிக்கல் உரிமத்துக்கு ரூ.80 கோடியும், ஒளிபரப்பு உரிமத்துக்கு ரூ.30 கோடியும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் இதனை தமிழில் ஜீ தமிழ் டி.வி.ஒளிபரப்பும். இதனை இரு நிறுவனங்களும் முறையாக அறிவிக்கவில்லை.
பல்வேறு வியாபார முறைகள் மூலம் லைக்கா நிறுவனத்திற்கு இதுவரை ரூ.200 கோடி வந்திருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளிவருவதற்கு முன்பே ரூ.500 கோடி வரை வியாபாரம் செய்து முடித்திட லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.